×

அரசியல் சாசனத்தை மாற்ற சதி; எஸ்.சி., பி.சி., முன்னேறக்கூடாது என பாரதிய ஜனதா விரும்புகிறது: தெலங்கானாவில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

திருமலை: தெலங்கானா மாநிலம் நிர்மலில் மக்களவை தேர்தலையொட்டி நேற்று நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது அடிலாபாத் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அத்ரம் சுகுணாவை ஆதரித்து அவர் பேசியதாவது: நாட்டில் அரசியல் சாசனத்தை மாற்ற சதி நடக்கிறது. தற்போது 2 கோட்பாடுகளுக்கு இடையே தேர்தல் நடக்கிறது. ஒருபக்கம் அரசியல் சாசனத்தை காக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. மறுபுறம் பாஜக அரசியல் சாசனத்தை அழிக்க முயல்கிறது. இன்று நாட்டில் உள்ள ஏழைகளுக்கு எது கிடைத்ததோ, அது அரசியலமைப்பின் மூலம் கிடைத்தது. பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும். பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியின சமூகத்தினர் முன்னேறக்கூடாது என பாஜக விரும்புகிறது.

நாட்டில் தேர்வு செய்யப்பட்ட கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி கடன்களை நரேந்திரமோடி தள்ளுபடி செய்தார். காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோது விமர்சனம் எழுந்தது. ஆனால், நரேந்திரமோடி பணக்காரர்களின் கோடிக்கணக்கான ரூபாய் கடனை தள்ளுபடி செய்தபோது ​​வளர்ச்சி நடக்கிறது எனக் கூறிக்கொள்கின்றனர். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வென்றால் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாட்டில் உள்ள ஏழைக்குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும்.

தெலங்கானாவில் ஆள்வது ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் அரசாக உள்ளது. உங்கள் நீர், காடுகள் மற்றும் நிலங்களை நாங்கள் பாதுகாப்போம். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.400 சம்பளம் வழங்கப்படும். ஆஷா, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளம் இரட்டிப்பாக்கப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிப்போம். பாஜக வெறுப்பை பரப்புகிறது, நாங்கள் அன்பை பரப்புகிறோம். நரேந்திரமோடி இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர். அவர் உங்களிடமிருந்து இடஒதுக்கீட்டை பறிக்க பார்க்கிறார். தனியார் மயம் என்றால் இடஒதுக்கீடு நீக்கம். ஒப்பந்த முறை என்றால் இடஒதுக்கீடு நீக்கம். அக்னிவீர் என்றால் இடஒதுக்கீடு நீக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

The post அரசியல் சாசனத்தை மாற்ற சதி; எஸ்.சி., பி.சி., முன்னேறக்கூடாது என பாரதிய ஜனதா விரும்புகிறது: தெலங்கானாவில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Bharatiya Janata ,Rakulganti ,Telangana ,RAKULGANDHI ,CONGRESS ,NIRMAL, TELANGANA STATE ,Adilabad ,Constituency Congress ,Atram Suguna ,S. C. ,P. ,Rakulganti indictment ,
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...